மாநகர போக்குவரத்துக் கழகம் 4 மண்டலங்களாக பிரிப்பு

Published : 25 Jul 2011

சென்னை, ஜூலை 24: சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தை நிர்வாக காரணங்களுக்காக இரண்டாக பிரிப்பதென கடந்த தி.மு.க. ஆட்சியின்போது திட்டமிட்டது. இதற்காக தனி அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர். ஆனால் அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

4 மண்டலங்கள்: இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சென்னை போக்குவரத்துக் கழகம் நிர்வாக வசதிக்காக தண்டையார் பேட்டை, அண்ணா நகர், அடையாறு, குரோம்பேட்டை என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டன.

தண்டையார்பேட்டை 1, 2, திருவொற்றியூர், எண்ணூர், வியாசர்பாடி, மாதவரம், பேசின்பாலம் ஆகிய பணிமனைகள் தண்டையார் பேட்டை மண்டலத்தின் கீழ் இயங்கும். அண்ணா நகர், ஆவடி, அம்பத்தூர், பெரம்பூர், பூந்தமல்லி, அயனாவரம் ஆகிய பணிமனைகள் அண்ணா நகர் மண்டலத்தின் கீழ் வரும். சென்ட்ரல், தியாகராய நகர், சைதாப்பேட்டை, திருவல்லிக்கேணி, அடையாறு, மந்தைவெளி ஆகிய பணிமனைகள் அடையாறு மண்டலத்துக்கு உள்பட்டது.

ஆலந்தூர், குரோம்பேட்டை, தாம்பரம், வடபழனி, அய்யப்பன்தாங்கல் ஆகிய பணிமனைகள் குரோம்பேட்டை மண்டலத்தில் வருகிறது. இந்த 4 மண்டலத்துக்கும் தனித்தனியாக பொது மேலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழக உயர் அதிகாரி கூறியது:

தண்டையார்பேட்டை, அண்ணா நகர் மண்டலங்கள் ஏற்கெனவே இயங்கிவந்தன. நிர்வாக வசதிக்காக இப்போது 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. மற்றபடி ஒரே போக்குவரத்துக் கழகமாகத்தான் செயல்படுகிறது. மாநகர் போக்குவரத்து கழகத்தை இரண்டாக பிரிப்பது குறித்து அரசுதான் அறிவிக்க வேண்டும். இது குறித்து ஏதேனும் அறிவிப்புகள் இருந்தால், வரும் பட்ஜெட் கூட்டத் தொடரின் போதுதான் தெரிய வரும் என்றார்.

முன்னதாக சென்னை மக்களின் போக்குவரத்து வசதிக்காக 1947-ம் ஆண்டு தனியார் நிறுவனங்கள் பஸ்களை இயக்கின. அப்போது சென்னையில் 30 பஸ்கள் இயக்கப்பட்டன. தனியார் வசம் இருந்த பஸ்கள் அரசுடைமையாக்கப்பட்டு, 1972 ஜனவரி 1 முதல் பல்லவன் போக்குவரத்துக் கழகமாக இயங்கத் தொடங்கியது. அப்போது 8 போக்குவரத்து பணிமனைகளுடன், 176 வழித்தடங்களில் 1,029 பஸ்கள் இயக்கப்பட்டன.

சென்னையில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வழித்தடங்களும், பஸ்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டன. போக்குவரத்து நிர்வாகத்தைச் சீர்படுத்தும் நோக்கில் 1994-ம் ஆண்டு பல்லவன் போக்குவரத்துக் கழகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதன்படி பூந்தமல்லி நெடுஞ்சாலையை மையமாகக் கொண்டு போக்குவரத்துக் கழகம் பிரிக்கப்பட்டது. பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு தென் பகுதிகளில் உள்ள போக்குவரத்து பணிமனைகள் பல்லவன் போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாகத்தின் கீழும், பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு வடக்கு பகுதிகளில் உள்ள போக்குவரத்து பணிமனைகள் டாக்டர் அம்பேத்கர் போக்குவரத்து கழக நிர்வாகத்தின் கீழும் இயங்கும் வகையில் பிரிக்கப்பட்டன. இந்த இரு போக்குவரத்துக் கழகங்கள் 1994 ஜனவரி 19 முதல் செயல்படத் தொடங்கின.

சில காரணங்களுக்காக மீண்டும் இரு போக்குவரத்துக் கழகங்களையும் ஒன்றிணைக்க அரசு முடிவு செய்தது. அதன்படி 2001 ஜனவரி 10 முதல் சென்னை மாநகர போக்குவரத்து கழகமாக இப்போது வரை செயல்பட்டு வருகிறது. 25 பணிமனைகளுடன், 696 வழித்தடங்களில் 3,240 பஸ்கள் இயங்கி வருகின்றன.
Link to article
—————————————————————–

– Chennai MTC has been split into 4 divisions for operational convenience.
– Tondairpet, Annangar, Adyar and Chrompet would be the new four divisions.
– MTC might be split into two seperate entities and if government decides on the issue, it will announced in the coming budget seesion.
– MTC has 25 depots, 696 routes and 3,240 buses.

This entry was posted by Subramanian R.

Leave a comment