Life of a TNSTC Driver by his Son
A good Share from FB Thanks to the writer.
என் அப்பா ஒரு நேர்மையான…அரசுப் பேருந்து ஓட்டுநர். அவருடைய அந்தக் காலத்து டைரிகளைப் புரட்டினால் மனிதர் அவர் ஓட்டிச் சென்ற வண்டி பற்றியும் கூடவந்த நடத்துனர் பற்றியும் மட்டுமே எழுதி இருப்பார். அல்லது பெரும்பாலான தினங்கள் நிரப்பப்படாமல் இருக்கும். அழகான குண்டு கையெழுத்தில் ‘இன்று டிஎன் 9867 வண்டியை ராம்நாடு டெப்போவில் எடுத்து குற்றாலம் ஹால்ட் அடித்தேன். நடந்துனராக* தம்பி முருகேசன் உடன் வந்தார்’… பெயர்களும் ஊர்களும் வண்டி நம்பர்களும் மாறி இருக்குமே தவிர இவ்வளவேதான் அந்த நாட்குறிப்புகளின் சாராம்சம். அப்பாவுக்கு மோட்டாரைத் தவிர வேறு எதுவும் தெரியாது. குடும்பமே உட்கார்ந்து கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருப்போம். அவருக்கு கிரிக்கெட் புரியாவிட்டாலும் எங்களுக்கு இணையாக உட்கார்ந்து பார்ப்பார். தரையில் ஒன் பிட்ச் ஆன பந்தை ஃபீல்டர் பிடித்து விட்டாலே, ‘அதான் கேட்ச் பிடிச்சுட்டான்ல அவுட்டே கொடுக்கல?’ என அப்பாவியாய் கேட்பார். ‘அடி தூக்கி அடி’ என்றெல்லாம் கோஷம் போடுவார். ஆனால் கடைசியில், ‘இந்தியா எத்தனை பாயிண்டு!’ எனக் கேட்டு எங்களைக் கடுப்பேற்றிவிட்டு தூங்கிப்போவார். தூக்க விஷயத்தில் கொடுத்து வைத்த ஜீவன். வெறும் தரையில் கையை மடக்கி தலைக்கு வைத்த அடுத்த ஐந்தாவது நிமிடம் தூங்க ஆரம்பித்து விடுவார். ஆனால் அதிகாலை 3 மணியோ 4 மணியோ அலாரம் வைக்காமலே டான் என எழுந்து டூட்டிக்கு கிளம்பி விடுவார். தொலைதூரப் பேருந்துகளை ஓட்டுவதே அவர் பெருவிருப்பம். ராமேஸ்வரம் டூ குற்றாலம், ராமேஸ்வரம் டூ குமுளி, ராமேஸ்வரம் டூ கம்பம், ராமேஸ்வரம் டூ சென்னை போன்றவைதான் அதிகம் அவர் ஓட்டியது. பாம்பன் ரோடு பாலம் திறக்கப்பட்டபோது ராஜீவ் காந்தி சென்ற ஜீப்புக்கு முன் அரசு பஸ் சென்றதை யாரேனும் டிவி கிளிப்பிங்ஸில் அப்போது பார்த்திருக்கக்கூடும். வலியச் சென்று அந்த முதல் பாம்பன் பால பஸ் வாய்ப்பைப் பெற்று தைரியமாக ஓட்டிச் சென்ற பெருமை அப்பாவுக்கு உண்டு. அதேபோல அப்போதெல்லாம் ராமநாதபுரம் டூ சென்னை பஸ்ஸை ரெண்டு ஓட்டுநர்கள் ஓட்டிச் சென்ற காலம். முதல்முறையாக* ஒரேஒரு டிரைவரை வைத்து பரிசோதித்துப் பார்க்கலாமே என மருதுபாண்டியர் போக்குவரத்துக்கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி முடிவெடுத்தபோது அப்பா முன்வந்து தூங்காமல் ஓட்டிச் சென்றார். அதன்பிறகு இப்போதுவரை ஒரே டிரைவர்தான் தெக்கத்திப்பக்கமிருந்து ஓட்டி வந்து திரும்பச் செல்கிறார்கள். எல்லா இரவுகளும் ஒரே மாதிரி விடியாது இல்லையா? பல நாட்கள் டூட்டி முடிந்தும் வீட்டுக்கு அப்பா வராமல் போனதுண்டு. செல்போன் இந்தியாவுக்குள் நுழையாத காலகட்டம் அது. அம்மா என்னைத்தான் எம்.பி.டிசி பணிமனைக்கு அனுப்பி வைப்பாள். அங்கிருப்பவர்களிடம் ப*தட்டத்தோடு ‘அப்பா இன்னும் வீட்டுக்கு வரலை சார்’ என்று நிற்பேன். ‘விஷயமே தெரியாதா? அப்பா போன வண்டி ஆக்சிடெண்ட்டு தம்பி. அழுவாதே. அப்பாவுக்கு ஒண்ணும் ஆகலை. லாரிக்காரன் ராங்கா சைடு வாங்கி ஏறி இருக்கான். சின்னதா அடி. இப்போ தூத்துக்குடில இருக்கார். இன்னிக்கு சாயங்காலம் வந்துடுவார்!’ என்பார்கள். இதுபோல ‘மலைப்பாதையில் உருண்டுருச்சு’, ‘பிரேக் ஃபெயிலியராகி புளியமரத்தில் மோதிடுச்சு’, லிவர் கட் ஆகி வயலுக்குள்ள பாய்ஞ்சிடுச்சு’ என திகில் லிஸ்ட் உண்டு. தலையிலும் கையிலும் கட்டுப்போட்டு வீட்டுக்கு சிரித்தபடி வருவார். தான் சமயோசிதமாக ஸ்டியரிங்கை…க்ளட்ச்சை…பிரேக்கை லாவகமாக கையாண்டு பெரும் விபத்தைத் தவிர்த்த விதத்தை சொல்லிக் காட்டுவார். அந்த லாவகத்துக்காகவே அவர் ஓட்டும் பஸ்ஸில் பிரயாணம் செய்யும் ஆவல் பிறக்கும். ஆனாலும் இதுவரை அவர் ஓட்டிய பஸ்ஸில் நான் பயணித்ததில்லை. நண்பர்களும், ‘உன் அப்பா செமையா உருட்டிட்டாரு…’ ‘செம வேகமா ஓட்டுனாருடா!’ என கலவையாக தங்கள் பயண அனுபவங்களைச் சொல்லி இருக்கிறார்கள். இப்போதும் அப்பாவுக்கு ஒரு ஜோடி காது கிடைத்தால்போதும். பி.ஆர்.சியில் வேலைக்குச் சேர்ந்த காலத்தில் ஆரம்பித்து எம்.பி.டி.சி உருவான வரலாற்றைத் தொட்டு மோட்டார் வாகனச் சட்டம், போக்குவரத்து சாலை விதிமுறைகள், தான் சந்தித்த விபத்துகள், நெகிழ்ச்சியான தருணங்கள் என மடைதிறந்த வெள்ளமாய் கொட்டித் தீர்த்து விடுவார். ரிட்டையர்டு ஆன பிறகு குளத்தாங்கரை வேப்பமரத்தடி என எங்காவது நான்கைந்து பெருசுகளிடம் உட்கார்ந்து தன் சாகச அனுபவங்களைப் பந்தி வைக்க ஆரம்பித்து விடுவார். காலையில் 8 மணிக்கு ஆரம்பித்தால் சோறுதண்ணி மறந்து சாயங்காலம் 3 மணி வரையிலும்கூட நீளும். ‘இப்படி வெட்டிக்கதை பேசிக்கிட்டுத் திரியிறாரே இந்த மனுஷன்!’ என அம்மாவின் கரிச்சுக் கொட்டல்களுக்கும் மசியாதவர் திடீரென ஒருநாள் மீண்டும் வண்டி ஓட்ட ஆரம்பித்து விட்டார். எவ்வளவோ தடுத்தும் கேட்கவில்லை. வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறாரே என வருத்தம் எனக்கு. இம்முறை கீழக்கரை முகமது சதக் இன்ஜினீயரிங் காலேஜ் பஸ் ஓட்டுநர். ‘இந்த வயசான காலத்துல ஏன் வேண்டாத வேலை?’ எனக் கேட்டால், ‘சும்மா வீட்டுலே இருக்குறது ஒருமாதிரி இருக்குப்பா. வண்டி ஓட்டுறதுல பொழுது நல்லாப் போகுது. குடும்பத்துக்கு வருமானமும் கிடைக்குது. மோட்டாரும் அப்படியே என் கைக்குள்ள இருக்குப்பா!’ என்கிறார்.
very good driver and thanks many many for his dedicated service. And also THANKS MANY FOR HIS SAFETY DRIVING HABITS.
LikeLike